அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி: மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3 சகோதரர்கள்
அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, நீட் தேர்வில் வெற்றி பெற்ற 3 சகோதரர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமார் மற்றும் அவரது மனைவி மங்கையர் திலகம் ஆகியோரின் மகன்களே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தத் தம்பதிக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் அருணும் தரணும் இரட்டை சகோதரர்கள். ராம்குமார் தனது மூன்று மகன்களையும் வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்ததுடன், அவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.
மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து நீட் தேர்வை எழுதிய அவர், முதல் முயற்சியில் 300 மதிப்பெண்கள் பெற்றார். இருப்பினும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் மனம் தளராமல் 2025-ம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வை எழுதினார்.
அந்தத் தேர்வில் 420 மதிப்பெண்கள் பெற்றபோதிலும் அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து விடாமுயற்சியுடன் இந்த ஆண்டும் நீட் தேர்வை எதிர்கொண்ட வெங்கட் ஸ்ரீ, 440 மதிப்பெண்கள் பெற்றார்.
இதனிடையே, இரட்டை சகோதரர்களான அருண் மற்றும் தரணும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினர். இதில் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்றனர். மூன்று சகோதரர்களும் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற தங்களது இலக்கை விடாமுயற்சியுடன் தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சகோதரர்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற சவுராஷ்டிரா சங்கத்தின் 45-வது ஆண்டு விழாவில், இந்த மூன்று சகோதரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர், சவுராஷ்டிரா சங்கத் தலைவர் ராம்தாஸ் உள்ளிட்டோர் மூவருக்கும் கேடயம் மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தனர்.



