கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: தன்வி சர்மா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
தென் கொரியாவின் அசன் நகரில் நடைபெற்று வரும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா மகளிர் ஒற்றையர் பிரிவில் சிறப்பான வெற்றியுடன் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியில் தன்வி சர்மா, சீனாவின் யுவான் அன் சி-யை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தன்வி சர்மா 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றார்.
இதே பிரிவில் பங்கேற்ற மற்ற இந்திய வீராங்கனைகளும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ரக்ஷிதா ராம்ராஜ், இஷாராணி பருவா, அன்மோல் ஹார்ப் மற்றும் அஷ்மிதா சாலிஹா ஆகியோர் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்தனர்.
இதற்கிடையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். அவர் இஸ்ரேல் வீரர் டானில் டுபோவென்கோவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிடாம்பி காந்த் 20-22, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
கொரியா மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அடுத்த சுற்று போட்டிகளில் வெற்றியை தொடரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



