இந்தியாவில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியம் தீவிர பரிசீலனை!
உலகளவில் கிரிக்கெட் போட்டிகளைப் பணமழை கொட்டும் விளையாட்டாக மாற்றிய பெருமை ஐபிஎல் (IPL) தொடரையே சேரும். அதன் தொடர்ச்சியாக, பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டையும் வணிக ரீதியாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் புதிய நிலைகளுக்குக் கொண்டு செல்ல ஐசிசி மற்றும் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில், புகழ்பெற்ற இங்கிலாந்து – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து யோசித்து வருவதாகக் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பர்க் தெரிவித்துள்ளார்.
பிபிசி ‘ஸ்டம்ப்டு’ பாட்காஸ்டில் இது தொடர்பாகப் பேசிய டாட் கிரீன்பர்க், “கிரிக்கெட் விளையாட்டில் புதிய வாய்ப்புகளை நாம் எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு வலுவான நல்லுறவு உள்ளது. எனவே, இந்தியாவில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து நாம் பரிசீலிக்கலாம். உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்றாலும், இந்த சாத்தியக்கூறுகளை நாம் நிராகரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் இன்றும் மிகவும் வலுவான அடித்தளத்துடன் உள்ளது. உலகளாவிய கிரிக்கெட்டில் தற்போதுள்ள மிகப்பெரிய சவாலே, ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள் மட்டுமே இருப்பதுதான். நாங்கள் விரும்பும் அனைத்து முக்கியப் போட்டிகளையும் நடத்த வேண்டுமெனில் கூடுதல் மாதங்கள் தேவைப்படுகின்றன” என்று கால அட்டவணை நெருக்கடியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியை இந்தியாவில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வாரியங்களின் ஒப்புதலுடன், பிசிசிஐ-யின் பூரண ஒத்துழைப்பும் தேவையாகும். உலகளவில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நவீன கிரிக்கெட் சூழலில், நடுநிலைமை கொண்ட இந்தியாவில் ஆஷஸ் போன்ற பாரம்பரியமிக்க போட்டிகளை நடத்துவது டெஸ்ட் கிரிக்கெட்டின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



