60,120 விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
தட்கல் திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளிடம் ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், இணைப்பு வழங்குவதில் மின்வாரியம் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்பு கோரி தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வறட்சியால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளிடம் ரூ.1,250 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துவிட்டு, மின் இணைப்பு வழங்காமல் காலதாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என அன்புமணி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக, 2023-ம் ஆண்டு இதே தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.250 கோடிக்கும் அதிகமான தொகையை முன்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண்மைக்கான இலவச மின் இணைப்பைப் பெறுவதற்காக மொத்தம் 60,120 விவசாயிகளிடமிருந்து சுமார் ரூ.1,500 கோடி வசூலித்துள்ள மின்சார வாரியம், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் இருப்பது மிகப்பெரிய அநீதி என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்கள் முதல் அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, வறட்சி காரணமாக குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் ஏற்கெனவே கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், விவசாயிகளிடம் ரூ.1,500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 விவசாயிகளுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



