புதுச்சேரியில் தேசியக்கொடி ஊர்வலம்: அமித் ஷா தொடங்கி வைப்பு; காவிக் கொடியை நிராகரித்த சம்பவம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற தேசியக்கொடி ஊர்வலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடிகளுடன், நாட்டின் முக்கிய தலைவர்களின் படங்களையும் கைகளில் ஏந்திச் சென்றனர். ஊர்வலத்தை அமித் ஷா தொடங்கி வைத்தபோது, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக புதுச்சேரி தலைவர் ராமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காவிக் கொடியை வழங்கிய நிர்வாகிகள்
தேசியக்கொடி ஊர்வலத்தை தொடங்கி வைப்பதற்காக அமித் ஷா மேடைக்கு வந்தபோது, பாஜக நிர்வாகிகள் அவரிடம் காவி நிறத்திலான கொடியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பெற்றுக்கொண்ட அமித் ஷா, “தேசிய கொடி தான் வேண்டும்” எனக் குறிப்பிட்டார். இதையடுத்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தேசியக்கொடியை எடுத்து வந்து அமித் ஷாவிடம் வழங்கினார்.
பின்னர் தேசியக்கொடியை கையில் ஏந்திய அமித் ஷா, அதனை அசைத்து தேசியக்கொடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை
இதற்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கியிருந்த தனியார் ஹோட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, கட்சியின் அமைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த முறையைப் போலவே புதுச்சேரி சட்டப்பேரவை பேரவைத்தலைவர் பதவியை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பேரவைத்தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜகவும் அதே பதவியை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு வாகனத்தில் புகை
இதனிடையே, அமித் ஷா தங்கியிருந்த தனியார் ஹோட்டலுக்கு வெளியே பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் திடீரென புகை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த வாகனத்தை உடனடியாக வேறு இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லி புறப்பட்ட அமித் ஷா
புதுச்சேரியில் தனது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்த அமித் ஷா, டெல்லி புறப்படுவதற்காக புதுச்சேரி விமான நிலையத்துக்கு சென்றார். அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.



