ஜார்க்கண்ட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ விசாரணை கோரி மாணவர்கள் 13-வது நாளாக போராட்டம்
ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (JPSC) நடத்திய போட்டித் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் 13-வது நாளை எட்டியுள்ளது. தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில், வினாத்தாள் கசிவு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (JLKM) தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ கடந்த ஆகஸ்ட் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற ஜேபிஎஸ்சியின் 14-வது ஒருங்கிணைந்த முதன்மைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அமலாக்கத் துறை (ED), சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஓஎம்ஆர் விடைத்தாளில் “Not Attempted” என்ற தனி தேர்வு வசதியையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியான உண்ணாவிரதம் காரணமாக தேவேந்திர நாத் மஹ்தோவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து, சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறைந்தபட்சம் தண்ணீரையாவது அருந்துமாறு அறிவுறுத்தியதாகவும், அதை மஹ்தோ ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், தீர்வுகளை பரிந்துரைக்கவும் அமைச்சர்கள் குழுவை முதல்வர் ஹேமந்த் சோரன் அமைத்துள்ளார். இருப்பினும், இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறியுள்ளனர். மேலும், அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வரும் 10-ஆம் தேதி ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாணவர் தலைவர் ராதே குமார் தெரிவித்துள்ளார்.



