“மாணவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” – ஜென்ஸீ இளைஞர்களை சந்தித்த ராகுல் காந்தி
டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜென்ஸீ இளைஞர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்களில் 5 பேரை டெல்லியில் ராகுல் காந்தி நேற்று சந்தித்து கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் போராட்டத்தின் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நியாயமான முறையில் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்தின் போது போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் மாணவர்கள் மீது அடக்குமுறையை பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார்.
மாணவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவர்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராகுல் காந்தி கூறினார். போராட்டம் முடிந்த பிறகும் சமூக வலைதளங்களில் மாணவர்கள் குறித்து அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் உண்மையான கவலைகள் மற்றும் கோரிக்கைகளை புரிந்துகொள்ள பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தவறிவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்தார். போராட்டத்தின் போது மாணவர்கள் எதிர்கொண்ட தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர்களிடம் நேரடியாக கேட்டறிந்ததாகவும் கூறினார்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய போராட்டம் சரியானது என தெரிவித்த ராகுல் காந்தி, அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்திய கல்வி முறை குறைபாடுகள் நிறைந்ததாகவும், சீர்குலைந்து வரும் அமைப்பாகவும் இருப்பது குறித்து கேள்வி எழுப்புவது குற்றம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.



