செந்தில் பாலாஜி, அசோக் குமாரின் முன்ஜாமீன் நிபந்தனை தளர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த முன்ஜாமீன் நிபந்தனைகளை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. இனி விசாரணைக்கு தேவைப்படும் நேரங்களில் மட்டும் போலீஸார் சம்மன் அனுப்பி அழைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அந்த உத்தரவின்படி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, குதிரை பேர வழக்கு தொடர்பான விசாரணையை திருவல்லிக்கேணி போலீஸார் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
விசாரணைக்குப் பிறகு, ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார். இனி விசாரணை தேவையுள்ள சமயங்களில் மட்டுமே போலீஸார் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேரில் சிலருக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சிறையில் இருந்த கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.



