திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மனு தள்ளுபடி: சிறை உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, தன்னை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது, மார்க்கண்டேயன் தரப்பில், சட்டமன்றம் பூட்டப்படும் என முதல்வர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே எம்எல்ஏ பேசியதாகவும், அவரது பேச்சில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும், மாஜிஸ்திரேட் உரிய ஆய்வு இல்லாமல் இயந்திரத்தனமாக சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுவெளியில் வெளியிடப்பட்ட பேச்சு என்பதால் அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்றம் நடைபெற உள்ள சூழலில் இதுபோன்ற கருத்துக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கைது செய்யாமல் விட்டிருந்தால் இதேபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெற வாய்ப்பு இருந்ததாகவும், அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பின்னரே மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த வழக்கில் மார்க்கண்டேயன் ஏற்கனவே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



