மேகேதாட்டு அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்தியது மத்திய அரசே; காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்காமல், அந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வைத்திருப்பது மத்திய பாஜக அரசுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் முன்வைத்த குற்றச்சாட்டை விமர்சித்த நயினார் நாகேந்திரன், தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்றார். மேலும், தமிழ்நாடும் உறுப்பினராக உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க முடியாது என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கே உள்ளது என்றும், அந்த ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு உரிய நேரத்தில் திறந்துவிடாமல் கர்நாடக காங்கிரஸ் அரசு தாமதப்படுத்தியதால், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆடிப்பெருக்கு நாளிலும் காவிரி நதி வறண்ட நிலையில் காணப்படுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசின் அணுகுமுறையும், தமிழகத்தில் கூட்டணியில் உள்ள ஆட்சியின் அலட்சியமும் காரணம் என அவர் விமர்சித்தார். கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுடனும், தமிழகத்தில் கூட்டணியில் உள்ள அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதவர்கள், மத்திய அரசை மட்டும் குற்றம்சாட்டுவது நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால நடைமுறையாகும் என்றும், தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்களில் அந்தக் கட்சி சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
காவிரி நீர் பிரச்சினை போன்ற முக்கியமான விவகாரங்களில் அரசியல் குற்றச்சாட்டுகளை விடுத்து நேரத்தை வீணாக்காமல், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தின் நீருரிமையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



