அமைச்சர் பெயரை பயன்படுத்தி ரூ.25 லட்சம் வசூல் புகார்: தவெக நகர செயலாளர்கள் 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், டாஸ்மாக் லாரி டெண்டர் பெற்றுத் தருவதாகக் கூறி அமைச்சர் பெயரை பயன்படுத்தி ரூ.25 லட்சம் வரை வசூலித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 2 நகர செயலாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தவெக நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மேற்கு நகர செயலாளர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் சிலர் அணுகி, டாஸ்மாக் குடோனில் இருந்து மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை கொண்டு செல்லும் லாரி டெண்டர் பெற்றுத் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷிடம் பேசி டெண்டர் பெற்றுத் தருவதாகவும், அதற்காக பணம் வழங்க வேண்டும் என்றும் இருவரும் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது. இதன்படி, லாரி டெண்டர் வாங்கித் தருவதாக கூறி ரூ.25 லட்சம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சியினர் சிலர் அமைச்சர் விக்னேஷின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, அமைச்சர் தரப்பில் இருந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, தவெக நகர செயலாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



