காவிரி விவகாரத்தில் திமுக கபட நாடகம் நடத்துகிறது: மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு தவெக பதிலடி
காவிரி பிரச்சினையில் திமுக கபட நாடகம் நடத்துவதாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குற்றம்சாட்டியுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாக திமுக தவித்து வருவதாகவும், காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தவெக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விவசாயிகள் நலனையும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் தமிழக முதல்வர் விஜய்யின் அணுகுமுறை என்றும், திமுகவைப் போல சுயநல அரசியல் செய்வதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட்டணி வைத்து, பல்வேறு பதவிகளையும் பொறுப்புகளையும் பெற்ற திமுக, காவிரி பிரச்சினைக்காக ஒருநாளாவது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததா என தவெக கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திமுக ஆட்சியில் இருந்தபோது முயற்சி செய்ததா என்றும் அந்த கட்சி விமர்சித்துள்ளது.
ஆட்சியில் இருக்கும்போது காவிரி விவகாரத்தில் குரல் கொடுப்பது போல் செயல்பட்டு, பின்னர் அமைதியாகிவிடும் கட்சி திமுக என்றும் தவெக குற்றம்சாட்டியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நேரங்களில் மட்டும் மண், மொழி, உரிமை என போராட்டக் குரல் எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.
மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் திமுக தற்போது விரக்தியில் இருப்பதாகவும், காவிரி விவகாரத்தில் கபட நாடகம் நடத்துவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தவெக கூறியுள்ளது.
மேலும், காவிரி பிரச்சினையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் விமர்சனங்களை தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையுடன் பேச வேண்டும் எனவும் தவெக வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, மேகேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் விஜய் தனிமைப்படுத்தப்பட்டு நிற்பதாகவும், அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்டப் போகிறார் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.



