காவிரி பிரச்சினையில் ராகுலை அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல – மாணிக்கம் தாகூர்
காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை என்றும், தேவையின்றி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (ஜூலை 30) செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி, ‘ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை வரும் ராகுல் காந்தி, மேகேதாட்டு அணை கட்டுவது தமிழகத்திற்கு எதிரானது, கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்று சொல்வாரா? அப்படி சொன்னால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தயார்’ என்று கூறியுள்ளார். தமிழ்நாடு – கர்நாடக இடையிலான காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இந்த ஆண்டு மழை பொய்த்ததால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரு மாநில முதல்வர்களுடன் பேசி இந்த உத்தரவை செயல்படுத்த வைக்க வேண்டியது பிரதமர் மோடியின் கடமை. ஆனால் அந்த கடமையில் இருந்து பிரதமர் தவறுகிறார் என்பதே தமிழக மக்களின் குற்றச்சாட்டு. இதைதான் நாம் கண்டிக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார். பிரதமரை எளிதில் அணுகக்கூடிய நிலையிலும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேசி, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கவும், ஆணையத்தின் உத்தரவுப்படி தண்ணீர் திறக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதைதான் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதற்கு மாறாக தேவையில்லாமல் ராகுல் காந்தியை வம்புக்கு இழுப்பது நியாயமல்ல. அவர் பிரதமர் ஆனதும் இந்த கோரிக்கையை அன்புமணி வைக்கலாம். காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு. சட்டமன்றத்தில் தமிழக நியாயத்திற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள். காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் செய்ய விரும்பவில்லை. அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழகத்தின் குரலை உரக்க வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. எனவே அன்புமணி அரசியலை தவிர்த்து, மத்திய பாஜக அரசில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



