மின் ரீடிங் முறையை ஒழுங்குபடுத்தும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வழங்குக – மு.க.ஸ்டாலின்
மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணி சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு தன் நிர்வாக திறமையின்மையை தவெக அரசு வெட்டவெளிச்சமாக்கியுள்ளது என்றும், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாய பொருளாதார சுமையை சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும் என்றும் திமுக ஐடி விங் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை மேற்கோள் காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலை பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்த குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் வரை மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணி சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



