முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி
தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோவில்பட்டியில் கடந்த 18-ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே அவரது ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த 22-ம் தேதி நிராகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுபாதேவி, மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.



