எ.வ.வேலு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு: லுக் அவுட் நோட்டீஸ் ரத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேவேளையில், அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, நெடுஞ்சாலைத் துறை முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையின் போது வழங்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கை ரத்து செய்யவும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யவும் கோரி எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த எ.வ.வேலு தரப்பின் மூத்த வழக்கறிஞர் வில்சன், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜராகி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளதாகவும், எனவே அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கினார். அதே நேரத்தில், வழக்கு தொடர்பான புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும், தேவையெனில் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்றும் அனுமதி அளித்தார். மேலும், அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்ற முந்தைய இடைக்கால உத்தரவை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்த நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்லும் முன் கீழமை நீதிமன்றத்தின் அனுமதியை கட்டாயமாக பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதற்கிடையில், வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அதற்கு பதிலளிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.



