ரூ.28 கோடி லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல்விசாரணைக்கு அனுமதி
பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விதிமீறி திட்ட அனுமதி வழங்கியதாக கூறப்படும் ரூ.28 கோடி லஞ்ச வழக்கில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல்விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், பெருங்களத்தூரில் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனம் சார்பில் மலையை ஒட்டிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக விதிகளை மீறி திட்ட அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ரூ.28 கோடி லஞ்சமாக பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
இதற்கிடையில், வைத்திலிங்கம் கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்தார். அதன் பின்னர், அவருக்கு எதிரான வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தவெக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வைத்திலிங்கம் மீதான வழக்கை முடித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல்விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல்விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



