பதவி விலகிய 6 எம்எல்ஏக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக மீண்டும் வலியுறுத்தல்
அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று பின்னர் பதவி விலகி ஆளும் கட்சியில் இணைந்த 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் அதிமுக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று சந்தித்து, பதவி விலகிய எம்எல்ஏக்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தின் அடிப்படையில் பதவி விலகி ஆளும் கட்சியில் இணைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சார்பில் இதுவரை 3 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இதையடுத்து மீண்டும் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
மேலும், ஏற்கெனவே அளித்த மனுக்களின் அடிப்படையில் கேட்கப்பட்ட சில விளக்கங்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதில் அளிக்கவில்லை என்றும், பதவி விலகிய எம்எல்ஏக்கள் அளித்த விளக்கக் கடிதங்களின் நகல்களை தற்போது கேட்டுள்ளதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
அந்த விளக்கங்களை பெற்ற பின்னரே அதற்கான பதிலை சட்டப்பேரவைத் தலைவரிடம் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார். வரும் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ஆஜராவது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முடிவு செய்வார் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.



