தவெக முதல் பட்ஜெட், அதிமுக கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க அடுத்த மாதம் செயற்குழு: பழனிசாமி திட்டம்
அதிமுக செயற்குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், தவெக அரசின் முதல் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தவெக, அதிமுகவின் ஆதரவை நாடிய நிலையில், பழனிசாமியின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என சி.வி.சண்முகம் வலியுறுத்தினார். மேலும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்க முயற்சி நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சி பதவிகளை பழனிசாமி நீக்கினார். தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். சி.வி.சண்முகம் அணியில் இருந்த 19 எம்எல்ஏக்கள் பின்னர் பழனிசாமியுடன் சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளை பழனிசாமி வழங்கினார்.
ஆனால், சில எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அது ஏற்கப்படவில்லை. இதனால் புதிய பொறுப்புகள் தேவையில்லை என்றும், கட்சித் தொண்டர்களாக தொடர்வதாகவும் 9 எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு கடிதம் அளித்தனர்.
இந்த சூழலில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டங்களில் அதிருப்தியில் உள்ள சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் மீண்டும் இணக்கமான சூழலை உருவாக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், அதிருப்தி நிர்வாகிகளை சமாதானப்படுத்துவது, தவெக அரசின் முதல் பட்ஜெட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தவெக அரசுக்கு கண்டனம், மத்திய அரசுக்கு கோரிக்கைகள், அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



