தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறக்க ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கர்நாடக அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு உடனடியாக நீர் திறக்க நாளைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழக்கப்பட வேண்டிய 41.15 டி.எம்.சி தண்ணீரில், இதுவரை வெறும் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடக அரசு வழங்கிப் பாக்கி வைத்துள்ளது என்று சாடியுள்ளார்.
கர்நாடக அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருந்தும் தமிழ்நாட்டிற்குத் தர மறுப்பது மனிதநேயமற்ற செயல் என்றும், காவிரியில் தண்ணீர் வராததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, பாசன நிலங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உரிய நீரைப் பெறத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


