திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் வலியுறுத்தல்
ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதில் 3 பெண்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு தேடி வந்த ஈழத் தமிழர்களைப் பல ஆண்டுகளாக முகாம் என்ற பெயரில் சிறை போன்ற சூழலில் அடைத்து வைப்பது மனித உரிமைகளுக்கே எதிரானது என்றும், இந்தியாவில் வாழ விரும்பும் அவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கவும், வெளிநாடு செல்ல விரும்பும் நபர்களுக்குத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, உண்ணாவிரதம் இருக்கும் நபர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதுடன், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விரைந்து முடித்துத் திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



