எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என நினைவூட்டுகிறேன்: திமுக எம்எல்ஏவுக்கு வன்னியரசு கண்டனம்
சட்டப்பேரவைக்குள் தமிழக முதல்வர் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பேச்சுக்கு, அமைச்சர் வன்னியரசு தனது சமூகவலைத்தளப் பதிவின் மூலம் கடும் கண்டனத்தையும் பதிலடியையும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் தொடர்ந்து முதல்வர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட வன்னியரசு, அரசியல் களத்தைக் மக்கள் சேவையாகப் பார்க்காமல் ஆட்சி அதிகாரத் தோல்வி விரக்தியில் இவ்வாறு செயல்படுவதாகச் சாடினார்.
சட்டப்பேரவைக்குள்ளேயே முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று வெளிப்படையாகப் பேசியுள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) உடனடியாகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வன்முறைப் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக, எலும்புகள் என்பவை திமுகவினருக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே உண்டு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இத்தகைய அநாகரிகமான அரசியல் போக்கு முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.



