அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க அன்புமணி ராமதாஸ் அழைப்பு
அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுப்பதே நமது இலக்கு என்றும், அந்த இலக்கை அடைய அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வன்னியர் சங்கத்தின் 47-வது தொடக்க நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்குடன் 46 ஆண்டுகளுக்கு முன் ராமதாஸால் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. சங்கத்தின் தொடக்க நாளையொட்டி பாட்டாளி சொந்தங்களுக்கும் சமூகநீதிப் போராளிகளுக்கும் அன்புமணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்குவது, வன்னியர்களுக்கு மாநிலத்திலும் மத்தியிலும் உரிய இடஒதுக்கீடு அளிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது ஆகிய புரட்சிகரத் தீர்மானங்களை ராமதாஸ் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டினார்.
தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் மைல்கல் என்று கூறிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



