சிறை கைதிகள் மரண விவகாரத்தில் அரசு விலை பேசுகிறது; தவெக முதல்வர் மீது எடப்பாடி காட்டம்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதி ஒருவர் மற்றும் சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் என அடுத்தடுத்து இருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். சிறைக் காவலர்களின் கொடுமையால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உடல்களை வாங்க மறுத்து நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாகத் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நாகர்கோவில் சிறை மரணத்தில், உடலை வாங்க மறுத்துப் போராடிய குடும்பத்தினரை இந்த அரசின் அமைச்சர்கள் சிலர் நேரில் சென்று விலைபேசி, சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போயுள்ளனர்; இதேபோல புழல் சிறை மரணத்திலும் உறவினர்களிடம் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள்” என்று அவர் சாடியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் மற்றும் என்கவுன்டர்கள் அதிகரித்திருந்த நிலையில், மாற்றம் வரும் என நம்பி மக்கள் வாக்களித்த தவெக அரசிலும் ‘யானை பிடியிலிருந்து தப்பி முதலையின் வாயில் விழுந்தது போல’ மக்கள் பரிதவிப்பதாக பழனிசாமி விமர்சித்துள்ளார். விலைமதிப்பற்ற உயிர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே தவெக முதல்வருக்கு வந்துவிட்டது வேதனை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களில் 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டால் அவர்களின் குடும்பங்கள் சாபல்யம் அடைந்துவிடும் என்று ஆட்சியாளர்கள் மிதப்பில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடும் அதிகாரம் மிக்கவர்களைக் காக்க முயற்சிக்காமல், இதுபோன்ற லாக்-அப் மற்றும் சிறைச்சாலை மரணங்களைத் தடுக்க அரசு எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார்.
இறுதியாக தவெக முதல்வரை நோக்கி விமர்சனங்களை முன்வைத்த அவர், “கோடிகளில் சம்பளம் பெற்று, கொடுத்த கால்ஷீட் படி நடித்துவிட்டு, படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நஷ்டமில்லை என்று உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை என்பதை முதல்வர் உணர வேண்டும்” என்று கூறியுள்ளார். மாற்றத்தை வேண்டி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தைத் தராத வகையில் நேர்மையாக ஆட்சிச் சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்றும் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.



