‘ஜனநாயகன்’ என பெயர் வைத்த நடிகர் கட்சியில் ஜனநாயகம் இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மேகேதாட்டு அணை கட்டப்படுவதைத் தடுக்கத் தவறிய தவெக அரசைக் கண்டித்தும் திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று, தவெகவை கடுமையாக விமர்சித்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.பரமசிவம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சி.சீனிவாசன், “நாங்கள் சட்டப்பேரவையில் இருந்தபோது ஜனநாயகம் இருந்தது. ஆனால், தற்போது ‘ஜனநாயகன்’ என்று பெயர் வைத்திருக்கும் நடிகரின் கட்சியில் ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரம்தான் நடைபெறுகிறது. சட்டப்பேரவை மோசமான சூழ்நிலையில் கேலிக்கூத்தாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார்.
மேலும், ஒரு லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் எனக் கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நிதியமைச்சர் மரிய வில்சனின் செயல்பாடுகள் குறித்து சக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவறுகளை சுட்டிக்காட்டினாலும், அவர் தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதாகவும், ஆணவத்தின் உச்சியில் இருப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் ஆட்சியை தாங்கள்தான் வழங்குவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுவது வெட்கக்கேடானது என்றார். “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிள்ளைகள் நாங்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிதான் நடக்கிறது என்றால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாம். இன்னும் 6 மாதம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்கலாம். அதை விட்டுவிட்டு எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பது போல் பேசுவது தவறு” என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும், அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்ததாகவும் அவர் கூறினார்.



