பழநி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: முன்ஜாமீன் ரத்தானதால் சார்பதிவாளர் கைது
பழநி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான மோசடி வழக்கில், முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், முறைகேடாக வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கியவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பத்திரம் தயாரித்த வழக்கறிஞர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கும் ஒத்துழைத்து வந்தார். ஆனால், அவரது முன்ஜாமீனை நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
இதையடுத்து அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானல் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன் இன்று மாலை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



