ஆன்லைன் மற்றும் செயலி மூலம் மதுபான முன்பதிவு முறை இன்று முதல் தொடக்கம்: டாஸ்மாக் அறிவிப்பு
தமிழகத்தில் ஆன்லைன் மற்றும் செயலி மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து வாங்கும் புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான செயல்முறை விளக்க வீடியோவை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மதுபானங்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மதுபான விற்பனைக்காக தனி செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டு இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நுகர்வோர் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது, முதலில் நுகர்வோர் தங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, பணம் செலுத்தும் பகுதியில் செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி மூலம் உறுதி செய்ய வேண்டும்.
பணம் செலுத்திய பிறகு, கியூஆர் குறியீடு கொண்ட ரசீது வழங்கப்படும். அந்த ரசீதை பதிவிறக்கம் செய்து, முன்பதிவு செய்த டாஸ்மாக் கடைக்கு சென்று ஊழியரிடம் காண்பிக்க வேண்டும்.
கடை ஊழியர், நுகர்வோர் கொண்டு வரும் ரசீதில் உள்ள கியூஆர் குறியீட்டை கருவி மூலம் ஸ்கேன் செய்வார். பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட மதுபானத்தின் குறியீடும் சரிபார்க்கப்படும். விவரங்கள் சரியாக இருந்தால் ரசீது அச்சிடப்பட்டு, அதன்பின் மதுபானம் நுகர்வோருக்கு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில், ஆன்லைன் மூலம் மதுபான முன்பதிவு செய்யும் திட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மதுபான விற்பனையையும், மதுப்பழக்கத்தையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 4,048 மதுக்கடைகளில் கிடைக்கும் மதுபான வகைகள் மற்றும் அவற்றின் விலைகளை ஆன்லைன் மூலம் அறிந்து முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வருவது சரியான நடவடிக்கை அல்ல என்றும், இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



