விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தியும், தவெக அரசை கண்டித்தும் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது, பயிர்க்கடன் தள்ளுபடி, மேகேதாட்டு அணை விவகாரம், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மற்றும் காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடியில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கர்நாடக முதல்வரை சந்திப்பது தொடர்பாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருவதாகவும், தமிழக விவசாயிகளின் நலனில் அரசு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூர் மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
“தஞ்சையில் கூடுவோம்; விவசாய விரோத அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடி, மேகேதாட்டு அணை விவகாரம், மேட்டூர் அணை திறப்பு மற்றும் காவிரி நீர் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டவும், அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால், அடுத்தகட்டமாக மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.



