“நீட் விவகாரத்தில் விவாதிக்கத் தயார்; நாடாளுமன்றத்தை முடக்காதீர்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள்!
புது டெல்லி: “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு முழுமையாகத் தயாராக உள்ளது; எனவே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம்” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்குப் பதிலாக அவையில் அனைவரும் ஆக்கபூர்வமான முறையில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவையில் விவாதம் நடத்த வேண்டும் என விரும்பினால், எதிர்க்கட்சிகள் நேர்மறையான பங்கைச் செலுத்த வேண்டும். ஆனால் விவாதத்தைத் தவிர்க்க நினைத்தால், அடுத்தடுத்து பல்வேறு நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கி விடுவார்கள். நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் தாராளமாக முன்வைக்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தை முடக்காமல் ஒத்துழைக்க வேண்டும் என மனதாரக் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இக்கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களும், அத்தியாவசியப் பணிகளும் பட்டியலிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அவற்றைச் சற்று தள்ளிவைத்துவிட்டு, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நாட்டில் நடைபெறும் அனைத்துத் தேர்வு முறைகேடுகள் குறித்தும் முதலில் விவாதத்தைத் தொடங்க அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதால், இது அனைவருக்கும் பொதுவான மற்றும் கவலைக்குரிய விஷயமாகும் என்று அவர் குறிப்பிட்டுகாட்டினார். பல இடங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால், இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது ஒரு மாநிலம் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல என்றும், அனைவருக்குமான பொதுப் பிரச்சினை என்பதால் விவாதத்திற்கு முன்வருமாறும் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார்.



