இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இன்று இந்தியா பயிற்சி ஆட்டம்; டெஸ்ட் தொடருக்கு தீவிர தயாரிப்பு
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலேவில் நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி, இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்குகிறது. கொழும்பில் உள்ள நொண்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், இலங்கை ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ள இந்திய வீரர்களுக்கு முக்கிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். இதனால், இலங்கையின் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவதற்காக ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இலங்கை புறப்படுவதற்கு முன்பே தனிப்பட்ட முறையில் சுழற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், போட்டி சூழலில் அந்த பயிற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் தெரியவரும்.
இந்திய அணி கடைசியாக 2017-ஆம் ஆண்டு இலங்கையில் டெஸ்ட் தொடர் விளையாடியது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியிலும் உள்ளனர். மேலும், ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், வேகப்பந்து வீச்சை முகமது சிராஜ் வழிநடத்த உள்ளார். அவருக்கு பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் துணையாக இருப்பார்கள். சுழற்பந்து பிரிவில் குல்தீப் யாதவுடன் மானவ் சுதார், சரண்ஷ் ஜெயின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மறுபுறம், சோனல் தினுஷா தலைமையிலான இலங்கை பிரதமர் லெவன் அணியில் விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமரா, இஷிதா விஜேசுந்தரா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையில், கொழும்பில் இன்று இடைவிடாது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால், பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.



