யுபிஐ பரிவர்த்தனை கட்டண மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்க அழுத்தம் உள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் வசூலிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சட்டத் திருத்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செலவை அதிகரிக்கக்கூடும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை இருந்து வந்த கட்டணமில்லா நடைமுறையை மாற்றும் வகையில், வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் அனைத்து வகையான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யுபிஐ சேவையை பயன்படுத்தும் சாமானிய மக்களே இதன் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். யுபிஐ அமைப்பை நிதி ரீதியாக பராமரிக்க கட்டணம் வசூலிப்பதே ஒரே வழி என்ற மத்திய அரசின் கருத்து தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியிடம் போதுமான நிதி ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், 2025–26 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ரூ.2.86 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாகவும், அதில் ஒரு சிறிய பகுதியே டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பராமரிக்க போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், யுபிஐ மற்றும் ரூபே போன்ற இந்திய டிஜிட்டல் கட்டண முறைகள் இலவசமாக செயல்படுவது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி முன்பு விமர்சித்ததாகவும், இதனால் விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற அமெரிக்க கட்டண நிறுவனங்களின் சந்தை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக அவர் கூறியிருந்ததாகவும் ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007, வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் நிதிச் சட்டம் 2026 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில், வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதாவின் மூலம், யுபிஐ உள்ளிட்ட மின்னணு கட்டண முறைகளில் வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை மின்னணு கட்டண முறைகளுக்கு கட்டணம் விதிப்பதைத் தடுத்திருந்த சட்ட விதிகள் நீக்கப்பட உள்ளன.
இருப்பினும், இந்த கட்டண நடைமுறை தனிநபர் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது என்றும், நுகர்வோர்–நிறுவனம் மற்றும் நிறுவனம்–நிறுவனம் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



