செயின்ட் லூயிஸ் கிளப் ரேபிட் செஸ்: 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப் சார்பில் நடைபெற்று வரும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா ரேபிட் பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், அமெரிக்க வீரர்களான வெஸ்லி சோ, வோன் அரோனியன், லீனியர் டொமிங்கியூஸ் பெரெஸ், கருனா பேபியானோ, அவண்டர் லியோங், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டன் வான் பாரஸ்ட் மற்றும் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
9 சுற்றுகள் கொண்ட ரேபிட் பிரிவில் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 புள்ளிகளை குவித்து முதலிடத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் அவர் தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டிடம் தோல்வியை சந்தித்தார். இருப்பினும், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவை விட ஒரு புள்ளி அதிகம் பெற்றிருந்ததால் முதலிடத்தை உறுதி செய்தார்.
ரேபிட் பிரிவில் பிரக்ஞானந்தா 4 வெற்றிகள், 4 டிராக்கள் மற்றும் ஒரு தோல்வியுடன் போட்டியை நிறைவு செய்தார். அவரது சீரான ஆட்டம் அவருக்கு முதலிடத்தை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில், கிராண்ட் செஸ் டூர் தொடரின் ஒட்டுமொத்த வெற்றியாளர் ரேபிட் பிரிவு முடிவின் அடிப்படையில் மட்டும் தீர்மானிக்கப்பட மாட்டார். அடுத்ததாக நடைபெறும் பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
பிளிட்ஸ் பிரிவு முடிவடைந்த பின்னரே இந்த தொடரின் சாம்பியன் யார் என்பது தெரியவரும். தற்போது ஜாவோகிர் சிந்தரோவ் மற்றும் வெஸ்லி சோ ஆகியோர் தலா 11 புள்ளிகளுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



