ஜார்க்கண்டில் ‘ஜெய்ஷ்’ தீவிரவாத அமைப்புடன் தொடர்பு சந்தேகம்; பெண் ஒருவர் கைது செய்து தீவிர விசாரணை
மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ‘ஜெய்ஷ் இ முகமது’ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஹமீம் மண்டலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, அவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அர்பிதா சர்க்கார் என்ற பெண்ணை ஜார்க்கண்ட் மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு வலையமைப்பை கண்டறியும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போலீஸார் ஹமீம் மண்டலை கைது செய்தனர். அவர் முக்கிய அரசியல் பிரமுகர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக விசாரணையில் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாகிப்கஞ்ச் பகுதியில் அர்பிதா சர்க்கார் கைது செய்யப்பட்டார். செல்வாக்கு மிக்க நபர்களை காதல் வலையில் சிக்கவைத்து பின்னர் மிரட்டும் வகையிலான ‘ஹனிடிராப்’ வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட அர்பிதா சர்க்காரின் செல்போன் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள், தொடர்புகள் மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் யாரேனும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



