தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவகுமார் வேண்டுகோள்
தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பல்வேறு விவகாரங்கள் குறித்து நேரில் சந்தித்து விவாதிக்க விரும்புவதாக தமிழக முதல்வரின் அலுவலகத்தில் இருந்து எங்கள் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இருவரும் சந்திக்கலாம் என திட்டமிட்டோம்.
இருப்பினும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவுகளுக்கு பிறகு தற்போதைய சூழல் அதற்கு உகந்ததாக இல்லை என்று கருதுகிறேன். இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுகமான சூழல் நிலவ வேண்டியது அவசியம் என்பதால் இந்த சந்திப்பை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இரு மாநிலங்களும் பயனடைய வேண்டும் என்பதே என் விருப்பம். நமக்குள் எந்த கசப்புணர்வும் ஏற்பட நான் விரும்பவில்லை. தண்ணீர் விவகாரத்தில் இரு மாநிலங்களும் பயனடையும் வகையில் தீர்வு அமைய வேண்டும்.
இவை அனைத்தும் மழை பொழிவை பொறுத்தே அமைகிறது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதலையும் தீர்ப்பையும் வழங்கியுள்ளது. மேகேதாட்டு அணை திட்டத்தை பொறுத்தவரை அது எங்களை விட தமிழகத்திற்கே அதிக பலனளிக்கக் கூடியது. மின் உற்பத்தியை தவிர மற்ற அனைத்து வகையிலும் அது தமிழகத்திற்கு அதிக நன்மை அளிப்பதாகவே உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எந்த உத்தரவையும் மீற விரும்பவில்லை. அதேவேளையில் எங்கள் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தகவல் தெரிவிப்பது எனது கடமை. அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். நாளை மறுநாள் அவர்களை சந்திக்க உள்ளோம்.
தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது. அவர் வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது” என்றார்.
முன்னதாக மேகேதாட்டு அணை குறித்த கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது. மேலும் காவிரியில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



