இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் 10% இறக்குமதி வரி: அமெரிக்காவின் புதிய நடவடிக்கை அமல்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்க அரசு விதித்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக உலகளாவிய 10 சதவீத இறக்குமதி வரியின் காலக்கெடு நிறைவடைந்த நிலையில், புதிய வரி நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டாயத் தொழிலாளர் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், அதற்கான கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்தத் தவறியதாகவும் கூறி, உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா இந்த கூடுதல் வரி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பின் மூலம், இந்தியா தற்போது பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு இணையான வரி நிலைக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகளில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரீர் வெளியிட்ட அறிக்கையில், கட்டாயத் தொழிலாளர் முறையை மனித உரிமை மீறலாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையை பாதிக்கும் செயலாகவும் அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்த வரி நடவடிக்கை, அந்த நடைமுறைகளை ஒழிக்கும் முயற்சியின் தொடக்கமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கட்டாயத் தொழிலாளர் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு எதிராக சட்டங்களை விரைவாக இயற்றி அமல்படுத்தியுள்ள அமெரிக்காவின் வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் நடவடிக்கையை வரவேற்பதாகவும், அவை தொடர்ந்து முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் ஜெமிசன் கிரீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



