டெல்லியில் இளைஞர்கள் பேரணியில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு: கதவுகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டுப் பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.
ஜந்தர் மந்தரில் இருந்து சன்சத் மார்க் மற்றும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பகுதி வழியாக நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததில் சிலர் காயமடைந்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த விகாஸ் மார்க் மற்றும் ஐடிஓ பகுதிகள் முடக்கப்பட்டன.
முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், இந்த அநீதிகளுக்கு எதிராக நடைபெறும் நாடாளுமன்றப் பேரணியை வெற்றிபெறச் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், இப்போராட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கத் தடுப்புகளை மீறி முன்னேற முயல்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் டெல்லி காவல் துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, சிஜேபி செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கச் சென்றனர். பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்று, ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் டிப்கே தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.



