நீட் முறைகேடுகளை எதிர்த்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி முயன்ற சிபிஜே தொண்டர்கள் மீது தடியடி
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டக்காரர்களைக் கலைக்க டெல்லி காவல்துறை லேசான தடியடி நடத்தியது. இப்போராட்டம் காரணமாகப் புது டெல்லியின் பல்வேறு முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பெருமளவிலான காவல் படையினரும் விரைவு அதிரடிப் படையினரும் ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதோடு, ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் தற்காலிகமாக மூடியது.
புது டெல்லி மாவட்டம் முழுவதும் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 163-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. முன் அனுமதியுடன் ஒதுக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தரைத் தவிர மற்ற இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேரணி நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடியடி நடத்தப்பட்ட காணொளியைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, ஜனநாயக வழியிலான அமைதியான போராட்டத்தைக் காவல் துறை மூலம் அரசு நசுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தியாவில் ஜனநாயகம் நடத்தப்படும் விதத்தை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு, காவல்துறையினரை உடனடியாக விலகிச் செல்ல உத்தரவிடுமாறு பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.



