பல்லடம் அருகே காதல் விவகாரத்தில் விபரீதம்: தாய், மகளை கொன்றதாக இளைஞர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பான பிரச்சினையில், தாய் மற்றும் மகளை கொலை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமியின் மனைவி தனலட்சுமி (45). இவர் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மகள் பூவரசி (25), படிப்பை முடித்த பின்னர் பல்லடத்தில் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அக்ஷய் என்பவருக்கும் பூவரசிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் பின்னர் காதலாக மாறிய நிலையில், இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால், இவர்களது காதலுக்கு பூவரசியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் அக்ஷயுடன் பேசுவதை பூவரசி தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பூவரசியை சந்திப்பதற்காக அக்ஷய் நேற்று அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு பூவரசி மற்றும் அவரது தாயார் தனலட்சுமியுடன் அக்ஷய்க்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த அக்ஷய் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பூவரசி மற்றும் தனலட்சுமியை வெட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீட்டில் இருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அக்ஷயை பிடித்த பொதுமக்கள், அவரைக் கட்டி வைத்து பல்லடம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அக்ஷயை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கொலை நடைபெற்ற இடத்தை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். காதல் தொடர்பான பிரச்சினையில் தாய், மகள் இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



