கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: 7 மாதங்களுக்குப் பின் காதலன் டொராண்டோ விமான நிலையத்தில் கைது
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது காதலனை டொராண்டோ போலீஸார் கைது செய்துள்ளனர். சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் வெளிநாட்டில் பதுங்கியிருந்த அவரை அடையாளம் கண்ட போலீஸார், டொராண்டோ விமான நிலையத்துக்கு வந்தபோது கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோவில் வசித்து வந்த 30 வயதான இமான்ஷி குரானா, கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி இரவு திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். மறுநாள் காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இமான்ஷி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், இமான்ஷியின் காதலனான 32 வயது அப்துல் கபூரிக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாடு முழுவதும் தேடும் வகையில் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இமான்ஷி குரானாவின் மரணம் தொடர்பாக டொராண்டோவில் உள்ள இந்தியத் தூதரகம் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்திருந்தது. மேலும், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அப்துல் கபூரியின் இருப்பிடத்தை சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் டொராண்டோ சிறப்புப் போலீஸ் படையினர் கண்டறிந்தனர். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு டொராண்டோ விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது போலீஸார் அவரை கைது செய்தனர்.
7 மாதங்களுக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



