ரூ.2.60 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டி மோசடி: விரைவில் நகை தயாரிப்பதாக கூறிய இருவர் கைது
சென்னையில் விரைவாக தங்க நகைகளை தயாரித்து வழங்குவதாக நம்பிக்கை அளித்து ரூ.2.60 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டியை பெற்று மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தங்க நகை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை ஜஸ்டிஸ் பண்டலை சாலை பகுதியில் வசித்து வரும் தங்க நகை ஏற்றுமதியாளர் மற்றும் வியாபாரியான பீமாராஜ் லோதாவிடம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபாத் மைதி தனது பட்டறையில் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்க நகைகளை தயாரித்து வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய பீமாராஜ் லோதா, கடந்த ஜூலை 15-ம் தேதி ரூ.2.60 கோடி மதிப்புள்ள 200 பவுன் (1,603 கிராம்) தங்கக் கட்டியை பிரபாத் மைதியின் மேலாளர் புத்தாதேவ் புனியாவிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் நகைகளை வழங்காமல் காலம் தாழ்த்திய பிரபாத் மைதி, பின்னர் செல்போன் அழைப்புகளுக்கும் பதிலளிக்காமல் தலைமறைவானார். இதையடுத்து பீமாராஜ் லோதா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில், கோயம்பேட்டில் பதுங்கியிருந்த மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னிபூர் பகுதியைச் சேர்ந்த பிரபாத் மைதி (32) மற்றும் சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் மைதி (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மோசடி செய்யப்பட்ட தங்கத்தில் ஒரு பகுதியை பிரபாத் மைதி, சஞ்சய் மைதியிடம் ஒப்படைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், யானைகவுனி பகுதியில் உள்ள தங்க நகை வியாபாரிகளிடமும் இதே முறையில் பிரபாத் மைதி மோசடியில் ஈடுபட்டிருந்தது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரிடமிருந்து மொத்தம் 346 பவுன் (2,768 கிராம்) தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய புத்தாதேவ் புனியா ஏற்கெனவே மற்றொரு தங்க மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



