தொழில் அதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறிப்பு வழக்கு: காவல் ஆய்வாளர் புகாரி பணியிடை நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து கைது செய்து விடுவதாக மிரட்டி தொழில் அதிபரிடம் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்க வியாபாரி அகில்குமாரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்து விடுவதாக அப்போது பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய புகாரி மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக அவரிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
மிரட்டல் தொடர்ந்து அதிகரித்த நிலையில், தொழில் அதிபர் அகில்குமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து யானைகவுனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மிரட்டி பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் புகாரியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



