கரூர் அரசு பள்ளியில் மாணவர்கள் முன்னே தலைமை ஆசிரியரை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்
கரூர் மாவட்டம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் கலைமதியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வகுப்பறையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கரூர் அருகேயுள்ள சின்னாண்டாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த கலைமதி, பள்ளிக்கு முறையாக வருவதில்லை என்றும், மாணவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தினர் சைல்டு லைனில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர் புவனா சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கையால் ஆத்திரமடைந்த கலைமதி, கடந்த ஜூலை 29ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் புவனாவை நேரடியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் முன்னிலையில் அவரை கன்னத்தில் அறைந்து, கீழே தள்ளிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பாராத இந்த சம்பவத்தை கண்டு மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த தாக்குதல் முழுமையாக பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, கல்வித்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில், இடைநிலை ஆசிரியர் கலைமதியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.



