சக பேராசிரியைக்கு ஆபாச மின்னஞ்சல் அனுப்பிய திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் கைது!
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) தயாரிப்பு பொறியியல் (Production Engineering) துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ஜெரால்டு (51). இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் சக பேராசிரியை ஒருவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருடனான தொடர்பை அந்தப் பேராசிரியை துண்டித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் ஜெரால்டு, சக பேராசிரியைக்குத் தனது மின்னஞ்சல் (E-mail) மூலம் ஆபாசச் செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இதனைப் பேராசிரியை கவனிக்காமல் விட்டுவிட்ட நிலையில், சமீபத்தில் அவரது கணவர் மின்னஞ்சலை எதிர்பாராதவிதமாகத் திறந்து பார்த்தபோது ஆபாசச் செய்திகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல் ஆய்வாளர் அம்பிகா வழக்குப் பதிவு செய்து பேராசிரியர் ஜெரால்டை கைது செய்தார்.



