‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ் வழங்க சட்டம் தேவை: நடிகர் பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் பெற விரும்பும் அனைவருக்கும் எளிதில் சான்று வழங்கும் வகையில் தமிழக அரசு தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி, நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் நீதிபதி தண்டபாணி முன்பு ஆஜராகி அந்த சான்றிதழை சமர்ப்பித்தார். அப்போது, இந்த சலுகை தனக்கு மட்டும் கிடைத்தால் போதாது என்றும், இதேபோன்று விரும்பும் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து பொது நல வழக்கு தொடரப்போவதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அப்போது அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாமல் இருந்ததாகவும், தற்போது அதுபோன்ற சூழல் இல்லாத நிலையில், இதற்காக தனி சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்குவதற்கான சட்டம் கொண்டு வருவதால் ஏற்கனவே உள்ள எந்த சட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும், தற்போது இதற்கென தனியான சட்ட நடைமுறை இல்லாததால், புதிய சட்டம் இயற்றுவது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் பார்த்திபன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொது நல வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.



