கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரைப்பட காட்சிகள் ரத்து: கன்னட அமைப்பினர் எதிர்ப்பால் திரையரங்குகள் முடிவு
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் சில கன்னட அமைப்பினர், தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெங்களூரு மற்றும் மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டு வந்த திரையரங்குகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். மேலும், திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த படத்தின் விளம்பர பேனர்களையும் கிழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கன்னட அமைப்பினரின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் காரணமாக கர்நாடகா முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்று வந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



