இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை: எண்ணெய் நிறுவனங்கள்
இ20 பெட்ரோலில் ஈரப்பதம் மற்றும் குளோரைடு இருப்பதாக அண்மையில் வெளியான தகவல்கள் தொடர்பாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இ20 பெட்ரோலில் ஈரப்பதம் மற்றும் குளோரைடு இருப்பதாக சமீபத்திய ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தீவிர சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் இ20 பெட்ரோலின் தரம் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் சீராக இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அறிவியல் அடிப்படையிலான பல்வேறு சோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் முடிவுகளின்படி, இ20 பெட்ரோலில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், எரிபொருளின் தரத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், வாகனங்களின் செயல்திறன் அல்லது நுகர்வோரின் நம்பிக்கையை பாதிக்கும் வகையிலான எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலுக்கான குளோரைடு தரநிலையை மத்திய அரசு கடுமையாக நிர்ணயித்துள்ளதாகவும், அந்த தரநிலை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக வலுவான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், மதுபான ஆலைகள், கிடங்குகள், முனையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட விநியோகச் சங்கிலியின் பல்வேறு கட்டங்களில் குளோரைடு அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எரிபொருளின் தரம் விநியோகத்தின் ஒவ்வொரு நிலையிலும் சீராக பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தர உறுதி நடவடிக்கைகளுடன் கூடுதலாக, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திலும் தினசரி 8 முதல் 12 முறை நீர் உட்புகுதல் மற்றும் அடர்த்தி தொடர்பான சோதனைகளை மேற்கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளில் நடமாடும் எரிபொருள் தரச் சோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், மிக உயர்ந்த தர உறுதிப்பாட்டை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளின் முடிவுகள் எரிபொருள் ஆய்வகங்கள் மூலமாகவும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இதனால், நுகர்வோர் இ20 பெட்ரோலை தொடர்ந்து நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் கட்டமைப்பு மூலம் விநியோகிக்கப்படும் இ20 பெட்ரோல், பரிந்துரைக்கப்பட்ட தர விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதுடன், விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் வலுவான தர உறுதி நடைமுறைகளுடன் வழங்கப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.



