தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை: சென்னையில் பவுனுக்கு ரூ.520 அதிகரிப்பு
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இன்று (ஆக. 8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கும் பொதுமக்களிடையே தங்கத்தின் விலை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் உலக பங்குச் சந்தைகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள தாக்கம் உலக பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. இதன் தாக்கம் சர்வதேச அளவிலான தங்க விற்பனையிலும் பிரதிபலித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதன் பின்னர் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை: சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.13,965-க்கும், ஒரு பவுன் ரூ.1,11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு மொத்தம் ரூ.520 உயர்வு ஏற்பட்டுள்ளது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.71 அதிகரித்துள்ளது. இதன்படி, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,234-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



