ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்? மத்திய அரசு பரிசீலனையில் புதிய முன்மொழிவு
ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ (UPI) வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை வணிகர் தள்ளுபடி கட்டணம் (MDR) விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால், அதிக மதிப்புள்ள டிஜிட்டல் வணிகப் பரிவர்த்தனைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதாவில், வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான தடையை நீக்கும் வகையில் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் புள்ளிவிவரங்களின்படி, யுபிஐ மூலம் நடைபெறும் மொத்த பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்டவை வெறும் 5 சதவீதம் மட்டுமே என்றாலும், அவற்றின் மொத்த மதிப்பு 65 சதவீதமாக உள்ளது. கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது, யுபிஐ பரிவர்த்தனைகளில் நிதி மூலதனச் செலவு குறைவாக இருப்பதால், வசூலிக்கப்படும் MDR கட்டணத்திற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், ரூ.2,000-க்கு உட்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது என கூறப்படுகிறது. இதனால் காய்கறி, மளிகைப் பொருட்கள், பால் வாங்குதல், ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணம் செலுத்துதல் போன்ற அன்றாட சிறிய பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது. மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் சுமார் 95 சதவீதம் இந்த கட்டண வரம்பிற்கு வெளியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த MDR கட்டணத்தை வணிக நிறுவனங்கள் தாங்களே ஏற்றுக்கொள்வார்களா அல்லது வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பார்களா என்பது அவர்களின் வணிகக் கொள்கையைப் பொறுத்தது. இருப்பினும், இந்த முன்மொழிவு குறித்து மத்திய அரசு இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



