ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே இருந்த 5.25 சதவீத வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை, பணவீக்கம், சர்வதேச சந்தை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் 5.25 சதவீதமாகவே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், மேற்காசிய போர் காரணமாக முக்கிய வர்த்தக வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கு சவாலாக அமைந்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய மதிப்பீட்டை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மூன்றாவது காலாண்டில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் தங்களது குறுகிய கால தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இந்த விகிதம் அதிகரிக்கப்பட்டால், பொதுவாக வங்கிகளும் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும்.
தற்போது ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால், வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதங்கள் உடனடியாக உயர வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.



