செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது மற்றும் மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களை வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவர், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளிலேயே ரமேஷ் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் குறித்து எந்த குறிப்பும் இல்லை என்றும், ஆரம்பத்தில் அவர் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை என்றும் வாதிட்டனர்.
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக எந்த தவறும் நடைபெறவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்கள் மற்றும் பதில் மனுக்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மதுபானங்கள் கொள்முதல் செய்வதற்காக நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாகவும், பார் உரிமையாளர்களிடம் இருந்து கட்சி நிதி பெறப்பட்டதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கும் தற்போதைய வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், மனுதாரரின் செல்போனில் டாஸ்மாக் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹவாலா பணப் பரிமாற்றத்திலும் மனுதாரர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அரசு தரப்பு, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியது.
இரு தரப்பினரின் வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்ற அரசு தரப்பின் வாதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பரிசீலித்தனர். இதையடுத்து, ரமேஷ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.



